சிங்கப்பூரின் முதல் ஜூடோ ஒலிம்பிக் வீரர்
1964 தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் சார்பில் பங்கேற்ற இரு ஜூடோ வீரர்களில் ஒருவர் கே.எஸ். மூர்த்தி என்று சுருக்கமாக அழைக்கப்படும் காலஞ்சென்ற திரு கணபதி சத்தியமூர்த்தி (படம்). இவர் 9வது ‘டென்’ தகுதி பெற்றவர்.
இவர் அங்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்றார். முதல் போட்டியில் திரு மூர்த்தி, பிலிப்பீன்சின் பெர்னாடோ ரெபுயானைத் தோற்கடித்தார். இரண்டாவது போட்டியில் அர்ஜெண்டினாவின் ரொபோல்ஃபோ பெரசிடம் தோல்வி கண்டு கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினார்.
தமது 14வது வயதில் தற்காப்புக் கலையைக் கற்கத் தொடங்கிய மூர்த்தி, ஜூடோ தற்காப்புக் கலையில் 18 மாதங்களில் கறுப்புப் பட்டைத் தகுதியைப் பெற்றார். வட்டார ரீதியில் பல விருது களைப் பெற்றுள்ள மூர்த்தி, பின்னர் அனைத்துலக நிலை நடுவராக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஹாக்கியில் மத்திய திடல் மதியுரைஞர்
தம்முடன் விளையாடிய ஹாக்கி ஆட்டக்காரர்களின் நன்மதிப்பைப் பெற்ற காலஞ்சென்ற கனகலிங்கம் சின்னத்தம்பி (படம்), 1964 தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் மலேசிய-சிங்கப்பூர் கூட்டு அணியில் இடம்பெற்றிருந்தார்.
கனகா என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர், சிலோன் விளையாட்டு மன்ற ஹாக்கி குழுவுக்காக விளையாடி, அக்குழு 1960களில் சிங்கப்பூர் ஹாக்கி சம்மேளனத்தின் வெற்றியாளர் விருதை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
“எந்த சமயத்திலும் எந்த இடத்திலும் முயற்சியைக் கைவிடாதே” என்பதே கனகாவின் தாரக மந்திரமாக இருந்ததால், இவரது வழிகாட்டுதலைப் பின்பற்றியவர்கள் விளையாட்டிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.
அண்மைய காணொளிகள்
08:58
10:51
09:27
12:21