Print
மும்பையில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில், வீடுகள் இடிந்து 33 பேர் பலியானார்கள்.
பதிவு: ஜூலை
19,
2021
04:30
AM
மும்பை,
மும்பையில் கடந்த ஜூன் 9-ந்தேதி பருவ மழைக்காலம் தொடங்கியது. கடந்த சில நாட்களாக நகரில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதலே நகரில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக நள்ளிரவு 12 மணி முதல் நேற்று அதிகாலை 2 மணி வரை மழை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்தில் நகரில் 10 செ.மீ. வரை மழை பதிவானது. இதன் காரணமாக நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது..
நேற்று அதிகாலை செம்பூர், மாகுல் பாரத்நகர் பகுதியில் உள்ள மலைக்குன்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த குன்றின் தடுப்புசுவர் இடிந்தது. இதில் தடுப்பு சுவர் அருகில் இருந்த வீடுகள் மீது மண் குவியல் விழுந்து அமுக்கியது. நள்ளிரவில் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் உயிரோடு இடிபாடுகளில் புதைந்தனர்.
தகவல் அறிந்து மாநகராட்சி தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இடிபாடு களில் சிக்கியிருந்த 21 பேரை மீட்டனர். மேலும் சில இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 33-பேர் உயிரிழந்துள்ளனர்.
மழையால் வீடுகள் இடிந்து பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் சுவர் இடிந்து விழுந்து உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்த மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மும்பையில் பலத்த மழையால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்திகளால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அங்கு அனைவருக்கும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் கிடைக்க விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
1.