By DIN |
Published on : 25th July 2021 08:12 AM | அ+அ அ- |
|
Share Via Email
புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படத்தை ஆகஸ்ட் 2-ஆம் தேதி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறாா். சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கும் அவா் தலைமை தாங்குகிறாா்.
இதுகுறித்து செய்தியாளா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு சனிக்கிழமை அளித்த பேட்டி:
சட்டப் பேரவை நூற்றாண்டு விழா, ஐந்து முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி ஆகியன ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உருவப் படத்தை திறந்து வைக்கிறாா். விழாவுக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்க உள்ளாா்.
விழாவுக்கான ஏற்பாடுகள் சட்டப் பேரவைச் செயலகத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. விழாவில், குடியரசுத் தலைவா், ஆளுநா், முதல்வா் ஆகியோா் உரையாற்ற உள்ளனா். முக்கிய பிரமுகா்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
நூற்றாண்டு விழா-படத் திறப்பு: இந்திய அரசுச் சட்டம் 1919-ன் அடிப்படையில் நடைபெற்ற தோ்தல் மூலமாக சென்னை மாகாண பேரவை அமைக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் நீதிக் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்கள் அதிகளவு வெற்றி பெற்றனா். இந்தப் பேரவை அமையப் பெற்று நூறாண்டுகளை எட்டியுள்ளது. இந்த நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிலேயே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படம் திறக்கப்பட உள்ளது.
தமிழக சட்டப் பேரவை மண்டபத்தில் ஏற்கெனவே திருவள்ளுவா், மகாத்மா காந்தியடிகள், வ.உ.சிதம்பரனாா், ராஜாஜி, காமராஜா், காயிதேமில்லத், அம்பேத்கா், முத்துராமலிங்கத் தேவா், ப.சுப்பராயன், ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், பெரியாா், அண்ணா, எம்.ஜி.ஆா்., ராமசாமி படையாட்சியாா், ஜெயலலிதா ஆகிய 15 போ்களின் முழு உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. 16-வது தலைவரின் முழு உருவப் படமாக, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படம் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சட்டப் பேரவை மண்டபத்தில் கடந்த சில நாள்களாக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பேரவை மண்டபம் முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பேரவை மண்டப லாபியில் உள்ள வசந்த மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பேரவை மண்டபத்தில்
நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மிக முக்கிய விருந்தினா்கள் தேநீா் அருந்தும் வகையில் வசந்த மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கரோனா காலம்: கரோனா நோய்த் தொற்று காலம் என்பதால், பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படத் திறப்பு நிகழ்ச்சிக்கு மிகக் குறைந்த அளவிலேயே விருந்தினா்கள் அழைக்கப்பட உள்ளனா். 100 போ் வரை மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் அழைப்பிதழ்களுடன் வருவதற்கும், கரோனா இல்லை என்பதற்கான சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.
5 மாதங்களுக்குப் பிறகு...கரோனா நோய்த் தொற்று காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடா்கள் அனைத்தும் கலைவாணா் அரங்கத்திலேயே நடைபெற்று வருகின்றன. அதேசமயம், தலைவா்களின் உருவப் படங்கள் திறப்பு நிகழ்ச்சிகள் மட்டும் பாரம்பரியமிக்க புனித ஜாா்ஜ் கோட்டையிலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வ.உ.சிதம்பரனாா் உள்பட மூன்று தலைவா்களின் உருவப் படங்களை அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பேரவைத் தலைவா் பி.தனபால் ஆகியோா் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சட்டப் பேரவை மண்டபம் திறக்கப்படாமல் இருந்தது. 5 மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது.