பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
02:20
மதுரை : மதுரையில் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஆர்.டி.ஓ., மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிகள் தேக்கம் மற்றும் பணிப்பளு அதிகரித்துள்ளன.
மத்திய அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆர்.டி.ஓ., நியமிக்கப்படவில்லை. இங்கு மூன்று வாகன ஆய்வாளர்களுக்கு பதில் ஒருவர் மட்டுமே உள்ளார். தெற்கு அலுவலகத்திலும் ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. உசிலம்பட்டி ஆய்வாளர் செல்வி கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். இதுபோல் வடக்கு அலுவலகத்தில் இரண்டு ஆய்வாளர்கள் பணியிடங்கள், அமலாக்கப் பிரிவில் 3 ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் போக்குவரத்து விதிமீறல், ஓவர் லோடு வாகனங்கள், குடிபோதையில் வரும் வாகனம் ஓட்டிகள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடக்கின்றன. மேலும் டிரைவில் லைசென்ஸ், எல்.எல்.ஆர்., பேட்ஜ் ஒர்க், வாகன பதிவு போன்ற பணிகளும் நாள் ஒன்றுக்கு 30 சதவீதம் மட்டுமே நடக்கிறது. இதுவும் அதிகாரிகளுக்கு கடும் பணிச்சுமை ஏற்படுகிறது.
ஜூலை 26ல் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் சாலை போக்குவரத்து ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இம்மாவட்டத்தில் கலெக்டரே ஆர்.டி.ஏ., (மண்டல டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி) பொறுப்பு வகிப்பதால் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் உள்ள இக்குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.