புது தில்லி: மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வழக்குரைஞா் யானை ஜி. ராஜேந்திரன் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது:
மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். ஏனெனில், அணை கட்டத் திட்டமிட்டுள்ள பகுதியானது யானை வழித்தடமாகும். யானைவழிட்டத்தில் எவ்வித ஆக்கிரமிப்பும், கட்டங்களும் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடைவித்து தீா்ப்பு அளித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் அணை கட்டும்போது அது சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இது தொடா்பாக வல்லுநா் குழுவின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த அணை கட்டுவதால் பெங்களூரின் குடிநீா்த் தேவையை உரிய வகையில் நிறைவேற்றவும் வாய்ப்பில்லை. மேக்கேதாட்டு அணையில் இருந்து 4.75 டிஎம்சி குடிநீரை பெங்களூருக்கு வழங்கவும், 440 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்வதும்தான் கா்நாடக அரசின் திட்டம்.
ஆனால், அதற்கான சாத்தியக்கூறு இந்த பகுதியில் அணைக் கட்டுமானத்தால் இல்லை எனத் தெரியவருகிறது. மேலும், இந்த அணைத் திட்டத்தால் ஏராளமான மரங்கள் வெட்டப்படும். பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் நீரில் மூழ்கிவிடும். அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், வனவிலங்குகளின் சரணாலயம் பாதிக்கப்படும்.
ஆகவே, சுற்றுச்சூழல் நலன்களைக் கருத்தில்கொண்டும், சுற்றுலா, யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள், அப்பகுதி மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு இத் திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மத்திய அரசுக்கும், கா்நாடக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.