Colors:
பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
10:45
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுவரும் லிப்ட் அமைக்கும் பணி விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் மலைக்கு மேல் சென்று வருகின்றனர். மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, 90 படிக்கட்டுகளை கடந்து, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், மருதமலை கோவில், ரோப்கார் அமைக்க வேண்டுமென பக்தர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, மருதமலையில் ஆய்வு செய்த வல்லுநர் குழு, ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறு இல்லை என, அறிக்கை அளித்தது. இதனையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில், 3.40 கோடி ரூபாய் மதிப்பில், லிப்ட் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மருதமலை ராஜகோபுரத்தின் வலதுபக்கத்தில், இரண்டு நிலைகளில், மேலே செல்வதற்கு இரண்டு லிப்ட். மேலிருந்து கீழே இறங்குவதற்கு இரண்டு லிப்ட் என, மொத்தம், நான்கு லிப்ட் அமைக்கவும். லிப்டில் ஒருமுறைக்கு அதிகபட்சம், 20 நபர்கள் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம், 3ம் தேதி மருதமலையில் லிப்ட் அமைக்கும் பணிக்கு டெண்டர் திறக்கப்பட்டது. அதன்பின், பிப்ரவரி, 8ம் தேதி, மருதமலையில் லிப்ட் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது வரை, லிப்ட் அமைக்கும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு, லிப்ட் அமைக்கும் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.