புதுடெல்லி: தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற (Parliament) மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா தடுப்பூசி தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மே 1 முதல் ஜூலை 13 வரை 41 லட்சம் கூடுதல் டோஸ்கள் குப்பிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி (Vaccine) போட்டதில், கொடுத்த அளவை வீணாக்காமல் அதிகபட்சமானவர்களுக்கு தடுப்பூசி போட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை அடுத்து, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
அதிகமாக தடுப்பூசிகளை வீணாக்கிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது பீகார் மாநிலம். பீகாரில் 1.26 லட்சம் தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் வீணடிக்கப்பட்ட அளவில் பாதி என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
தமிழ்நாடு 5.88 லட்சம் கூடுதல் டோஸ்கள் (Extra dose) பயன்படுத்தியது. மேற்கு வங்கம் 4.87 லட்சமம், குஜராத் 4.62 லட்சம் டோஸ்களை செலுத்தியுள்ளன. பீகாரில் அதிகபட்சமாக 1.26 லட்சம் தடுப்பூசி வீணடிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு அளித்த பதிலில் மேலும் பல விளக்கமான தகவல்கள் கொடுக்கப்பட்டன. அதன்படி, கோவிட் தடுப்பூசி (Covid vaccine) திட்டத்திற்கான 35,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், கொள்முதலுக்கு 8071 கோடி ரூபாய் மற்றும் தடுப்பூசிகளை போடுவதற்கான செயல்பாட்டு செலவு என இதுவரை 9725.15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் வரை 100.6 கோடி டோஸ்கள் வழங்குவதற்கு ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. தொற்றுநோயின் மாறும் தன்மையை பார்க்கும்போது, தடுப்பூசி திட்டம் எப்போது முடியும் என்ற கால வரையறையை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய தாமதம் ஏற்படவில்லை. உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆர்டர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டது என்று அரசு தெரிவித்துள்ளது. 100.6 கோடி டோஸ் ஆர்டர்களில் 64.1 கோடி டோஸ்கள் கோவிஷீல்ட், 36.5 கோடி டோஸ்கள் கோவாக்சின் (Covaxin) ஆகும்.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும், மூன்றாம் அலை வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தடுப்பூசி போடும் பணிகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தற்போது ஆர்வமாக இருப்பதால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.
தமிழ்நாட்டுக்கு இதுவரை 1 கோடியே 80 லட்சத்து 31 ஆயிரத்து 670 தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. தடுப்பூசியை இந்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.