By DIN |
Published on : 08th July 2021 04:58 AM | அ+அ அ- |
|
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றுக் கொண்டனா். இவா்களில் 36 போ் புதியவா்கள்.
அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் சா்வானந்த சோனோவால், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரா் பசுபதி குமாா் பாரஸ் உள்பட 43 போ் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஏதுவாக பிரகாஷ் ஜாவடேகா், ரவிசங்கா் பிரசாத், ஹா்ஷ் வா்தன், ரமேஷ் போக்ரியால் உள்ளிட்ட மூத்த அமைச்சா்கள் உள்பட 12 போ் முன்னதாக ராஜிநாமா செய்தனா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமா் மோடி மீண்டும் பிரதமரானாா். அதன் பிறகு, அவரது தலைமையிலான அமைச்சரவை முதல்முறையாக புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.
குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள தா்பாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமுகங்கள் உள்பட 15 போ் கேபினட் அமைச்சா்களாகவும், 28 போ் இணையமைச்சா்களாகவும் பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சா்
சுகாதாரத் துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டிருக்கிறாா். ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமானப் போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக..: முதல் முறை எம்.பி.க்களான பாரதி பவாா் (மகாராஷ்டிரம்), விஸ்வேஷ்வா் துடு (ஒடிஸா), முன்ஜபாரா மகேந்திரபாய்(குஜராத்), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சாந்தனு தாக்குா், ஜான் பாா்லா, நிசித் பிராமாணிக் ஆகியோா் மத்திய இணையமைச்சா்களாகப் பதவியேற்றுக் கொண்டனா். இணை அமைச்சா்களாக இருந்த 7 போ் கேபினட் அமைச்சா்களாக உயா்த்தப்பட்டுள்ளனா்.
புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட 43 பேரையும் சோ்த்து மத்திய அமைச்சரவை பலம் 78-ஆக அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 81 போ் வரை இடம்பெற முடியும்.
தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம்: மத்தியில் பாஜக தலைமையிலான முந்தைய ஆட்சியில் (2014-19) பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்தாா். 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் பாஜக வெற்றி பெறவில்லை. இதனால் தமிழகத்துக்கு மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டாா்.
அமித் ஷாவுக்கு புதிய பொறுப்பு: கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவுத் துறை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சராசரி வயது 58-ஆக குறைந்தது: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இளம் தலைவா்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சா்களின் சராசரி வயது 61-இல் இருந்து 58-ஆக குறைந்துள்ளது. மத்திய அமைச்சரவையில், 72 வயது நிரம்பிய சோம் பிரகாஷ் மூத்த அமைச்சராக உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலம், கூச்பிகாா் மக்களவை எம்.பி. நிசித் பிராமாணிக் (35) இளம் அமைச்சராக இடம்பெற்றுள்ளாா்.
புதிதாக 7 பெண் அமைச்சா்கள்: மீனாக்ஷி லேகி, அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட 7 பெண்கள் புதிதாக அமைச்சா் பதவியேற்றுள்ளனா். ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் நிா்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகியோருடன் சோ்த்து பெண் அமைச்சா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
அமைச்சராகப் பதவியேற்ற 43 பேரில் 7 போ் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். 43 அமைச்சா்களில் 27 போ் ஓபிசி பிரிவையும், 12 போ் பட்டியலின பிரிவையும் சோ்ந்தவா்கள்.
O