4 Aug 2021 05:30
‘வலிமை’ ஒற்றைப் பாடல் வெளியீடு
‘வலிமை’ படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அஜித்.
சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அந்தச் சுவரொட்டி அனைத்து சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது.
இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். ‘நாங்க வேற மாரி’ என்று தொடங்கும் இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக் கணக்கானவர்கள் அதைக் கேட்டு ரசித்துள்ளனர். குறிப்பாக, இளையர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து ‘வலிமை’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள், திரையுலகத்தினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
‘யாஷிகா விரைவில் மீண்டு வருவார்’
‘கடமையை செய்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் கார் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாஷிகா.
இந்நிலையில், அவரால் படப் பணிகள் பாதிக்கப்படவில்லை என்றும் யாஷிகா விரைவில் முழுமையாக குணமடைய படக்குழுவினர் பிரார்த்தனை செய்வதாகவும் இயக்குநர் வேங்கட் ராகவன் தெரிவித்துள்ளார்.
“யாஷிகா ஆனந்த் வாகன விபத்தில் சிக்கி அவருடன் சென்ற தோழி மரணம் அடைந்த நிலையில், படுகாயத்துடன் யாஷிகா உயிர் தப்பினார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. அவர் விரைவில் மீண்டு வருவார். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
“இந்தப் படத்தில் தனக்குரிய பணிகளை அவர் முன்பே முடித்துக் கொடுத்துவிட்டார். அதனால் பட வேலைகள் எதுவும் அவரால் பாதிக்கப்படவில்லை. படம் வெளிவரும்போது அவர் மகிழ்ச்சியாக திரையரங்கில் அமர்ந்து பார்ப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்கிறார் வேங்கட் ராகவன்.
ஆட்சியர் ஆன நடிகர் மகன்
பிரபல குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து திரையுலகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேசிய அளவில் 75ஆவது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றிருந்தார் ஸ்ருதன். இதற்காக ரஜினி, கமல் உட்பட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே அவர் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டது குறித்து இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இனிமேல்தான் அவர் பொறுப்பேற்க உள்ளார்.
“பணியில் சேர்ந்த உடன் கல்வி வளர்ச்சி, வர்த்தகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன். பொது மக்களுக்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்,” என்கிறார் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
அண்மைய காணொளிகள்
08:58
10:51
09:27
12:21