18 Jul 2021 23:02
தமிழகத்தில் கொரோனா செய்திகளை ஓரங்கட்டி பேசுபொருளாக மாறி இருக்கிறது கொங்கு நாடு விவகாரம். தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை கொங்கு நாடு என்று தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கடந்த வாரம் கோவை வடக்கு மாவட்ட பாஜக தீர்மானம் நிறைவேற்றியதும் அரசியல் களத்தில் சூடு கிளம்பியது.
ஆனால், உண்மையில் கொங்கு நாடு என்னும் ஒரு பிரிவினையை முதன்முதலில் கையில் எடுத்தது தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிதான். அதன் தலைவர் ஈஸ்வரன் 2015 ஆகஸ்ட் மாதமே “இரண்டு கோடி மக்களுக்கு ஒரு மாநிலம் என்ற கணக்கில் கொங்கு நாடு என்று பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்,” என்று தெரிவித்து இருந்தார். அந்த ஆயுதத்தைத் தான் தற்போது பாஜக கையில் எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
உண்மையில் அப்படி ஒரு மாநில யோசனை பாஜகவசம் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். காரணம் கடந்த வெள்ளிக்கிழமை மாநில பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை (படம்) 2026 சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.
எனவே பாஜகவின் குறி தமிழகம் மீதா அல்லது தனி மாநிலம் மீதா என்பதும் கொங்கு நாடு முழக்கம் என்பது எதிர்காலத்திற்கான கனவா அல்லது கற்பனையா என்ப தும் இன்னும் தெளிவாகவில்லை. அப்படி ஒரு பிரிவினையை பாஜக முன்னெடுக்கவில்லை என்றும் ஒன்றிய அரசு என்ற மத்திய அரசை குறுகிய கண்ணோட்டத்துடன் அழைப்பவர்களுக்குத்தான் கொங்கு நாடு பயம் ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் 68 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான தொகுதிகள் பன்னெடுங்காலமாக அதிமுகவுக்கு ஆதரவாக விளங்கி வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பேரெழுச்சியுடன் திமுக வெற்றி பெற்றபோதிலும் கொங்கு மண்டலத்தின் 68 தொகுதிகளில் 44ல் அதிமுக கூட்டணி வென்றது. திமுகவுக்கு பூஜ்யமே மிஞ்சியது. அதே நேரம் கோவை, தருமபுரியில் உள்ள 15 தொகுதிகளையும் அதிமுகவே அள்ளியது. அத்துடன் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10ல் அதிமுக கூட்டணியே வென்றது.
கொங்கு நாடு: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து பேரவைத் தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் குளித்தலை தவிர கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வேடசந்தூர் பேரவைத் தொகுதிகள் கொங்கு மண்டலத்துக்குள் வருகின்றன.
மொத்தமுள்ள வாக்காளர்களில் 30% கொங்கு வேளாளக் கவுண்டர்கள், 30% மொழிவழி சிறுபான்மையினர் (இதில் 15% அருந்ததியர்கள்), 35 % செங்குந்த முதலியார்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், கோவை செட்டியார்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குடியேறிய முக்குலத்தோர், கொங்கு சாணார்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்த இந்து-கிறிஸ்தவ நாடார்கள் உள்ளிட்ட பிற தமிழ் சமூகத்தினர் என்ற சமூக அடுக்கில்தான் மக்கள் வாழ்கின்றனர். எஞ்சிய 5% மதசிறுபான்மையினர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில் பாஜகவை வலுவாகக் காலூன்ற வைக்கும் முயற்சியில் சில அரசியல் நகர்வுகளை பிரதமர் மோடி-அமித் ஷா கூட்டணி செய்யத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் பிற மண்டலங்களை ஒப்பிடும்போது கொங்கு மண்டலத்தில் இயல்பாகவே மென்மையான ஹிந்துத்துவா வாக்காளர்கள் ஆக அதிகம். மேலும், மத சிறுபான்மையினரின் வாக்குவங்கி மிகவும் குறைவு. இதனால், பாஜக வேர் பிடித்து வளர நல்ல விளைநிலம் கொங்கு மண்டலம்தான் என்பது மோடி-அமித் ஷாவின் கணக்கு. இதனால்தான் ‘கொங்கு நாடு’ என்ற புதிய முழக்கத்தை வெளிப்படையாக வரவேற்காவிட்டாலும் மறைமுகமாக ஆதரிக்க முற்பட்டிருக்கிறது பாஜக. இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என திமுக விமர்சிப்பது ‘கொங்கு நாடு’ விவ காரம் எழுப்பப்பட்ட பின்னர் ஓரளவு அடங்கி இருப்பதாக தமிழக அரசியல் களத்தில் பேசப்படுகிறது.
அண்மைய காணொளிகள்
08:58
10:51
09:27
12:21