2 Jul 2021 05:30
புதுடெல்லி: கடந்த மே மாதம் உள்கட்டமைப்புத் துறைகள் 16.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளன. இத்தகவலை மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக பெரும்பாலான துறைகள் கடந்த ஓராண்டில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் தொழில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் மெல்ல தென்படத் துவங்கி உள்ளன.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், உரம், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகள் கடந்த மே மாதத்தில் 16.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளன.
இதே துறைகள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.4 விழுக்காடு வீழ்ச்சி அடைந்திருந்ததை தொழில்துறை அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
எஃகு, உருக்கு இரும்புத் துறை அதிகபட்சமாக 59.3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இயற்கை எரிவாயுத் துறை 20.1 விழுக்காடு, சுத்திகரிப்புப் பொருட்கள் 15.3 விழுக்காடு, சிமெண்ட் 7.9 விழுக்காடு, மின்சாரம் 7.3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த அமைச்சு, நிலக்கரித் துறை 6.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் உரம், கச்சா எண்ணெய் துறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்மறை வளர்ச்சி கண்டிருப்பதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்மைய காணொளிகள்
13:09