Send
பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா
பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு 2023-ம் ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. மேலும் எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால் அவருக்கு பதிலாக மாற்று தலைவரை தேர்வு செய்ய பா.ஜனதா கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் எடியூரப்பா கடந்த 16-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, 75 வயது தாண்டிவிட்டதால், நீங்கள் பதவி விலக வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு மேலிட தலைவர்கள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை எடியூரப்பா உடனே மறுத்தார். வருகிற 26-ந் தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா பதிவிட்ட டுவிட்டில்,
பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளது.
இவ்வாறு எடியூரப்பா பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை அம்மாநிலத்தைச் சேர்ந்த 30 முக்கிய மடங்களைச் சேர்ந்த மாடதிபதிகள் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.