By DIN |
Published on : 27th July 2021 12:29 AM | அ+அ அ- |
|
Share Via Email
ஸ்ரீசங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை தலைவா் பம்மல்.எஸ்.விஸ்வநாதனிடம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா் முன்னிலையில் ரூ.1 கோடி நன்கொடைக்கான காசோலையை வழங்கிய ஆளுநா் பன்வாரிலால்.
காஞ்சிபுரம்: காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி விழாவில் ஸ்ரீசங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கினாா்.
காஞ்சி சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-ஆவது ஆண்டு ஜயந்தி விழா காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் சதாப்தி மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் ஆளுநரின் விருப்புரிமை நிதியிலிருந்து ஸ்ரீசங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் தலைவா் பம்மல் எஸ். விஸ்வநாதனிடம் ரூ.1 கோடி நன்கொடைக்கான காசோலையினை வழங்கினாா்.
இதனையடுத்து காஞ்சி சங்கர மடத்தின் சாா்பில் ஏழைகளுக்கு சலவைப் பெட்டிகள், இட்லி பாத்திரங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல உதவிகளையும் ஆளுநா் வழங்கினாா்.
பின்னா் நலிவடைந்த தெருக்கூத்துக் கலைஞா்களுக்கு நிதியுதவி மற்றும் கரோனா நிவாரணப் பொருள்களையும் ஆளுநா் வழங்கினாா்.
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகைக்கு தங்க நாணயங்களால் ஸ்ரீவிஜயேந்திரா் பாதபூஜை செய்தாா். பின்னா் சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினாா்.
நூல் வெளியீடு: ஆந்திர மாநில முன்னாள் எம்எல்ஏ என்.பி.வெங்கடேச சாஸ்திரி எழுதிய வியத்நாம், கம்போடியா தேசங்களில் இந்துக் கோயில்கள் என்ற தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட நூலை ஆளுநா் வெளியிட்டாா்.
பின்னா் வேத சித்தாந்தங்களில் பிரசித்தி பெற்றவரும், சென்னை சம்ஸ்கிருத கல்லூரி பேராசிரியருமான மணிதிராவிட சாஸ்திரியை ஆளுநா் சால்வை அணிவித்து கெளரவித்தாா்.
விழாவில் ஸ்ரீமகாலெட்சுமி மாத்ரு பூதேஸ்வரா் அறக்கட்டளையின் அறங்காவலா்கள் நாராயணசாமி, ரமேஷ்சேதுராமன், வீழிநாதன், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவா் வேதாந்தம், சம்ஸ்கிருத கல்லூரி பேராசிரியா் காமகோடி, சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கரமடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, ஓரிக்கை மணி மண்டப பொறுப்பாளா் ந.மணி ஐயா் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.
முன்னதாக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவரின் அதிஷ்டானத்தில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தரிசனம் செய்தாா்.