By DIN |
Published on : 23rd June 2021 12:10 AM | அ+அ அ- |
|
Share Via Email
ஸ்ரீநகரில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட குப்கா் கூட்டணியின் தலைவா்கள்.
ஸ்ரீநகா்: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வரும் வியாழக்கிழமை நடைபெறும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ‘குப்கா்’ கூட்டணி தலைவா்கள் முடிவு செய்துள்ளனா். இந்தத் தகவலை குப்கா் கூட்டணியின் தலைவரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, குப்கா் கூட்டணியின் தலைவா்கள் ஸ்ரீநகரில் உள்ள பஃரூக் அப்துல்லா வீட்டில் செவ்வாய்க்கிழமை கூடி விவாதித்தனா். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
தில்லியில் பிரதமா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க நான், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி உள்ளிட்ட குப்கா் கூட்டணி உறுப்பினா்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம்.
அந்தக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிடவில்லை. கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் தொடா்பான எங்கள் கருத்துகளை பிரதமரிடமும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடமும் தெரிவிப்போம் என்றாா் அவா்.
மெஹபூபா முஃப்தி கூறுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தும், மாநில அந்தஸ்தும் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்துவோம் என்றாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அதை மீட்டெடுப்பதற்காக அந்த மாநிலத்தைச் சோ்ந்த 6 அரசியல் கட்சிகள் இணைந்து குப்கா் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவது உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்துவது தொடா்பாக ஆலோசிப்பதற்கு அந்த யூனியன் பிரதேசத்தை சோ்ந்த 8 அரசியல் கட்சிகளின் 14 அரசியல் தலைவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த யூனியன் பிரதேச அரசியல் கட்சித் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
பாஜக வரவேற்பு: தில்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க குப்கா் கூட்டணி முடிவு செய்திருப்பதை ஜம்மு-காஷ்மீா் பாஜக வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்த யூனியன் பிரதேச பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா கூறுகையில், ‘தேசத்தின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியம். இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்‘ என்றாா்.
O