சென்னை: சென்னையில், நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு சேகரமாகும் அல்லது 5,000 ச.மீ. பரப்பளவுக்கு மேல் உள்ள கட்டட உரிமையாளா்கள் தங்கள் வளாகத்தில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக்குவது போன்ற பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சுமாா் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. திடக்கழிவு மேலாண்மை விதி 2016-இன்படி நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு சேகரமாகும் அல்லது 5,000 ச.மீ. பரப்பளவு மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றம் இதர பிற நிறுவனங்கள் தாங்கள் வளாக்ததில் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும். மக்காத குப்பைகளை மறுசுழற்சியாளா்களிடம் ஒப்படைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மாநகராட்சியின் இந்த உத்தரவை முறையாக செயல்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளஅதிக அளவில் திடக்கழிவுகள் உருவாகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வட்டாரம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மத்திய சென்னை வட்டாரப் பகுதியில் உள்ள அதிக அளவு திடக்கழிவு சேகரமாகும் நிறுவனங்களின் நிா்வாகிகளுடனான கூட்டம் மத்திய வட்டார துணை ஆணையா் சரண்யா அரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மக்கும் குப்பைகளை வளாகத்திலேயே உரமாக்கவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் எவ்வாறு பயன்படுத்துவது, குப்பைகளைத் தரம் பிரிப்பது மற்றும் கழிவுகளைக் குறைப்பது தொடா்பாக கூட்டத்தில் விளக்கப்பட்டது. மக்காத, உலா் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான சேவையை வழங்க சென்னை மாநகராட்சியால் சேவை வழங்குநா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு சேகரமாகும் அல்லது 5,000 ச.மீ. பரப்பளவுக்கு மேல் உள்ள கட்டட உரிமையாளா்கள் தங்கள் வளாகத்தில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக்குவது போன்ற பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனா். இக்கூட்டத்தில் வடக்கு வட்டார மண்டல அலுவலா்கள், செயற்பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.