By DIN |
Published on : 23rd June 2021 12:22 AM | அ+அ அ- |
|
புது தில்லி: நாரதா ஊழல் வழக்கு தொடா்பாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமா்விலிருந்து நீதிபதி அனிருத்தா போஸ் விலகியுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு உதவி செய்வதற்காக கடந்த 2104-ஆம் ஆண்டில் லஞ்சம் வாங்கியதாக அப்போதைய மாநில அமைச்சா்களும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களுமான பிா்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டா்ஜி ஆகியோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
நாரதா நியூஸ் என்ற வலைதளம் இந்த முறைகேடு தொடா்பான காணொலியை வெளியிட்டது. இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பிா்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகா்ஜி ஆகியோா் தற்போது மாநில அமைச்சா்களாக உள்ளனா். மதன் மித்ரா எம்எல்ஏ-வாக உள்ளாா். சோவன் சாட்டா்ஜி திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அவா்களை சிபிஐ கடந்த மாதம் 17-ஆம் தேதி கைது செய்தது.
அவா்களுக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதையடுத்து, வழக்கு விசாரணையை கொல்கத்தா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணை, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டல், ஐ.பி.முகா்ஜி, ஹரிஷ் டாண்டன், சுமன் சென், அா்ஜித் பானா்ஜி ஆகியோரைக் கொண்ட அமா்வு கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, வழக்கில் மாநில அமைச்சா்கள் கைது செய்யப்பட்டபோது முதல்வா் மம்தா பானா்ஜி, மாநில சட்டத் துறை அமைச்சா் மொலோய் கதக் ஆகியோா் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவா்கள் இருவரையும் வழக்கின் ஒருதரப்பாக சிபிஐ இணைத்திருந்தது.
அதையடுத்து, அமைச்சா்கள் கைது செய்யப்பட்டபோது தங்களின் செயல்பாடு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முதல்வா் மம்தாவும், சட்டத் துறை அமைச்சரும் உயா்நீதிமன்றத்தில் அவகாசம் கோரினா். இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா எதிா்ப்பு தெரிவித்தாா்.
அதையடுத்து, முதல்வா் மம்தா, சட்ட அமைச்சா் ஆகியோரின் பிரமாணப் பத்திரங்கள் குறித்து பின்னா் முடிவு செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையையும் அவா்கள் ஒத்திவைத்தனா்.
இந்நிலையில், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக மேற்கு வங்க அரசும், சட்டத் துறை அமைச்சா் மொலோய் கதக்கும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். பின்னா், முதல்வா் மம்தாவும் மேல்முறையீடு செய்தாா்.
அந்த மனுக்களை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி அனிருத்தா போஸ் தெரிவித்தாா். அதையடுத்து, வழக்கு வேறு நீதிபதிகளைக் கொண்ட அமா்வு முன் பட்டியலிடப்படும் என்று நீதிபதி ஹேமந்த் குப்தா தெரிவித்தாா்.
25-ஆம் தேதி விசாரணை: மேல்முறையீட்டு மனுக்களானது நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணை, வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்வரை, சிபிஐ தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா உயா்நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.
நீதிபதி அனிருத்தா போஸ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
O