Colors:
பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
10:45
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நெரிசலை தவிர்க்க அனைத்து வாசல்களையும் திறக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஜூலை 5 முதல் இக்கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நோய் பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க இலவச தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கட்டண தரிசனம் செய்வோர் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். வடக்கு, மேற்கு கோபுரங்கள் வழியாக செல்ல அனுமதியில்லை. இலவச தரிசனத்திற்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க வடக்கு, மேற்கு கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.
ஹந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது: நான்கு கோபுர வாசல்களிலும் பக்தர்கள் சென்று வரும்போது அரசின் விதிகளை கடைபிடிக்க முடியும். நெல்லையப்பர் கோயிலில் 17 ஆண்டுகள் திறக்கப்படாத மூன்று வாசல்களை தற்போது திறக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். மீனாட்சி கோயிலிலும் அனைத்து வாசல்களை திறக்க வேண்டும். தவிர 17 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோயிலில் பக்தர்கள் அமர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும், என்றார். கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், முதல் அலையில் இருந்தே இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஊரடங்கு தளர்வை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றனர்.