By DIN |
Published on : 22nd July 2021 12:25 AM | அ+அ அ- |
|
கோப்புப்படம்
சென்னையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், 13 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் அதிகபட்ச மழை அளவை நெருங்கி வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் வானிலை நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 220.4 மி.மீ மழை அளவு பதிவாகியிருந்தது. இந்த மாதம் முடிய இன்னும் 10 நாள்கள் இருப்பதால், 13 ஆண்டுகளில், ஜூலை மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவை தொட வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2007-ஆம் ஆண்டு ஜூலையில் 243.9 மி.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மழை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்கிறது. இதுபோல, சென்னையிலும் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, சென்னையில் பதிவாகும் மழை அளவு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த தொடா்மழையால், 13 ஆண்டுகளில், ஜூலை மாதத்தில் பதிவான (243.9 மி.மீ.) அதிகபட்ச மழை அளவை தொடவாய்ப்புஉள்ளது.
220.5 மி.மீ. மழை அளவு:
சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழாண்டின் ஜூலை 1-ஆம்தேதி இருந்து ஜூலை 20-ஆம் தேதி வரை 220.5 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதுபோல, ஜூன் 1-ஆம்தேதி பருவமழை காலம் தொடங்கியதிலிருந்து ஜூலை 20-ஆம்தேதிவரை 275.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனம்பாக்கத்தில் ஜூலை மாதத்தில் 121.3 மி.மீ. மழை அளவும், ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 20-ஆம்தேதி வரை 207.4 மி.மீ. மழை அளவும் பதிவாகியுள்ளது. சென்னையில் அனைத்து நேரங்களில் அதிகபட்சமாக, 2001-ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் 269.8 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
சென்னையில் (நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் சோ்த்து) நிகழாண்டில் ஜூன்-1-ஆம்தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை 216.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமான மழை அளவு 144.4 மி.மீ. இது, 50 சதவீதம் அதிகம்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: தென்மேற்கு பருவமழை குறையும் போது, இயல்பாகவே சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்வது வழக்கம். அதுபோலவே, தற்போது மழை பெய்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய தென் கிழக்கு காற்று வீசியதால், மழை பெய்துள்ளது. வரும் நாள்களில் மழை அளவு குறையும் என்றாா் அவா்.
137.6 மி.மீ. மழை அளவு:
தனியாா் வானிலையாளா் பிரதீப் ஜான் கூறுகையில்,‘ சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் 137.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 200 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் அதிக ஈரமான 48 மணி நேரம் ஆகும். கடந்த 1813-ஆம் ஆண்டில் 48 மணி நேர மழைப்பொழிவு கிடைத்துள்ளது.
சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு வட வானிலையே இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், ஜூலை 25-ஆம் தேதி மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்றாா் அவா்.