By DIN |
Published on : 14th July 2021 04:00 AM | அ+அ அ- |
|
கோப்புப்படம்
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அனைத்து உரிமைகளும் கர்நாடகத்துக்கு இருப்பதால், அதற்கான திட்டப் பணிகளைத் தொடங்குவோம் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை அரசுமுறை பயணமாக வந்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை முதல்வர் எடியூரப்பா சந்தித்துப் பேசினார். அப்போது, மேக்கேதாட்டு அணை திட்டம் உள்ளிட்ட கர்நாடகத்தின் இதர நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தருமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், கிருஷ்ணா நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடுவது தொடர்பாகவும், மேக்கேதாட்டு அணை, கிருஷ்ணா மேலணை திட்டம், கலசா-பண்டூரி கால்வாய்த் திட்டம் ஆகியவற்றுக்குத் தேவையான சுற்றுச்சூழல் ஒப்புதலை அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்து முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு அல்லது வேறு எந்த மாநில அரசுகள் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எல்லா உரிமையும் கர்நாடகத்துக்கு இருப்பதால், அதற்கான திட்டப் பணிகளைத் தொடங்குவோம். மேக்கேதாட்டு உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாள்களில் அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் உதவிகளை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் செய்து தருவார். திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் தேவைப்படும் அனுமதிகளை பெற்றுத் தந்து, பிரச்னைகளைத் தீர்க்க உதவி செய்ய இருப்பதாக அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் உறுதி அளித்துள்ளார் என்றார் எடியூரப்பா.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, "மேக்கேதாட்டு அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) மத்திய நீர் வள ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது, காவிரி கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் முழுமையாக அறிந்திருக்கிறார். இந்த விவகாரத்தை அலசி ஆராய்ந்து, கர்நாடகத்துக்கு நீதி வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார்' என்றார்.