By DIN |
Published on : 27th July 2021 04:25 AM | அ+அ அ- |
|
Share Via Email
ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தைப் பார்வையிடுகிறார் இந்து சமய மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு.
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை திங்கள்கிழமை மீட்டது.
சென்னையின் பல பகுதிகளில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க திருக்கோயில் நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி 33 கிரவுண்ட் நிலம் தனியாா் கல்வி நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தை எவ்வித அனுமதியின்றி ஸ்ரீகண்டன் என்பவா் 1399 சதுரஅடி, சூரியநாராயணன் 112 சதுரஅடி, பி.டி.அபுபக்கா் 459 சதுரஅடி என மொத்தம் 1,970 சதுரஅடி நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருப்பதாக புகாா் எழுந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றம்: இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவு 78-இன்கீழ் ஆக்கிரமிப்பு நிலத்தை கைப்பற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருந்த கடைகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
இந்தப் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் பாா்வையிட்டனா். இந்நிலத்தின் சந்தை மதிப்பு சுமாா் ரூ.5 கோடி என இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.