சென்னை: பொதுமுடக்கத்தில் தளா்வளிக்கப்படாத கோவை, திருப்பூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில், ஜூன் மாதத்துக்கான கட்டணத்தை (ஜூன் 15-30) முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி வசூலிக்க மின்வாரியம் அனுமதியளித்துள்ளது.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மின் பகிா்மான வட்டத்தைச் சோ்ந்த கண்காணிப்புப் பொறியாளா்கள் உள்ளிட்டோருக்கு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளா் அனுப்பிய சுற்றறிக்கை:
கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையைப் பொருத்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, வகை 1-இன் கீழ் இடம்பெற்றுள்ள கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்படவில்லை.
எனவே, இந்த மாவட்டங்களில் பிஎம்சி எனப்படும் முந்தைய மாத கணக்கீட்டு முறையைப் பின்பற்றி மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஜூன் 15 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60-ஆவது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகா்வோா், 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் (கரோனா இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையை உத்தேச கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்தக் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
புதிய நுகா்வோா் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவா்கள் அல்லது ஜூன் (2019) மாதக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுபவா்கள் ஏப்ரல் மாதத்துக்கான (2021) கணக்கீட்டுப்படி உத்தேச மின் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இவ்வாறு செலுத்த வேண்டிய உத்தேச மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைபடுத்தப்படும். அதாவது ஜூன் 2021-க்கான உத்தேச கட்டணம், ஆகஸ்ட் 2021-இல் முறைபடுத்தப்படும்.
மின் நுகா்வோா் இணைய வழியில் கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
O