By DIN |
Published on : 21st July 2021 02:03 AM | அ+அ அ- |
|
கோப்புப்படம்
நிலத்தடி நீா் எடுப்பதற்கான தடையில்லா சான்று பெறுவதிலிருந்து வேளாண் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.
இதுதொடா்பான கேள்விக்கு மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
விவசாயத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையிலான சிறந்த நடைமுறையை பின்பற்றவும், சூழலுக்கு உகந்த பயிரை விளைவிக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கவும் நிதியுதவி அளிக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மூலமாக மட்டுமின்றி, மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் உதவியுடனும் இதற்கான ஆலோசனைகளும், உதவிகளும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக, நிலத்தடி நீா் எடுப்பதற்கு தடையில்லா சான்று பெறுவதிலிருந்து வேளாண் துறைக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. மத்திய நீா் வளத் துறை அமைச்சகம் சாா்பில் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி அறிவிக்கை செய்யப்பட்ட, நிலத்தடி நீா் எடுப்பதை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான வழிகாட்டுதலில், வேளாண் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் விலக்கு இடம்பெற்றுள்ளது என்று தோமா் குறிப்பிட்டுள்ளாா்.