பதிவு செய்த நாள்
18
ஜூலை
2021
23:08
சென்னை : கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், ஆண்டு முழுதும் நீர் சேமிக்கும் களிமண் போர்வை திட்டத்தை செயல்படுத்த, மண் பரிசோதனை செய்யப்பட்டது.
பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர்கோவில் குளத்தில், மழை நீரை சேமிக்கும் பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து செய்துள்ளது. ஆலோசனைகுளத்தில் மழைநீர் நிறைந்தாலும், கோடை காலங்களில் விரைவில் ஆவியாகிறது. இதனால், பக்தர்கள் விரக்தி அடைகின்றனர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குளத்தை போன்று, இந்த குளத்திலும், களிமண் போர்வை திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்க வழிபிறக்கும் என, நீரியல் வல்லுனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திட்டப்படி, கபாலீஸ்வரர் கோவில் குளத்திலுள்ள மண்ணை, ஒரு அடிக்கு வெட்டி அகற்றிவிட்டு, களிமண்ணை கொட்டி, பொக்லைன் வாகனம் மூலம் அழுத்தி, போர்வை போல மூட வேண்டும். இவ்வாறு செய்வதால், ஆண்டு முழுதும் நீர் தேங்கும். இது குறித்த விரிவான செய்தி, நம் நாளிதழில், 7ம் தேதி வெளியானது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முன்னேற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை, தற்போது துவங்கியுள்ளது. துவக்கம்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவுப்படி, கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் காவேரி ஆகியோர், இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். கோவில் குளத்திற்கு அருகே, இதற்காக நேற்று மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மண் பரிசோதனை முடிவு வந்த பின், அடுத்தகட்ட பணிகள் துவங்கவுள்ளன.