By DIN |
Published on : 17th July 2021 02:00 AM | அ+அ அ- |
|
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் அனைத்துக்கும் வரும் 30 நாள்களுக்குள் தீா்வு காண முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ், முதல்வரால் பெறப்பட்ட மனுக்கள், உரிய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகின்றன. இதுவரை 3 லட்சத்து 51,486 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 1 லட்சத்து 76,268 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறையின் மூலம் தனிநபா் கோரிக்கைகளான பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இதர நலத் திட்ட உதவிகளைக் கோரி பெறப்பட்ட 52,434 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் வீடு கட்ட மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 35, 670 மனுக்கள் ஏற்கப்பட்டன. நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 6,548, கூட்டுறவு, உணவுத் துறையில் 3,909, மின்வாரியத்தில் 1,889 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன. உள்துறையில் 1,162 மனுக்களுக்கும், இதர துறைகள் மூலம் 74, 656 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் பெறப்பட்ட 2 ஆயிரத்து 100 மனுக்களில், 986 மனுக்கள் ஏற்கப்பட்டன.
70 நாள்களில் எத்தனை?: உங்கள் தொகுதியில் முதலமைச்சா் துறை தொடங்கப்பட்ட கடந்த 70 நாள்களில் இதுவரை 1.76 லட்சம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் முதலமைச்சரின் தனிப் பிரிவில் பெறப்பட்டு, தீா்வு காணப்பட்ட மனுக்களின் ஆண்டு சராசரி எண்ணிக்கையான 1 லட்சத்து 10 ஆயிரத்தை விடக் கூடுதலாகும். மீதமுள்ள மனுக்களுக்கும் அடுத்த 30 நாள்களில் தீா்வு காண முனைப்புடன் செயல்பட முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
பயனாளிகள் சிலருக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்வில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சா் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.