By ஆசிரியர் |
Published on : 02nd July 2021 07:22 AM | அ+அ அ- |
|
Share Via Email
ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் ஜனநாயக நடவடிக்கைகளை மீட்டெடுக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியபோதே, அதன் வெற்றியைக் குலைக்கும் விதத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவும், ஜம்மு - காஷ்மீரில் அமைதியின்மை தொடரவும் பயங்கரவாத அமைப்புகள் விழைகின்றன என்பதன் வெளிப்பாடுதான் ஜம்மு விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் ஆளில்லா விமானத் தாக்குதல்.
வெடிக்கும் எரிமலையாக ஜம்மு - காஷ்மீர் பகுதி எப்போதும் தொடர வேண்டும் என்பதுதான் பிரிவினைவாத சக்திகளின் ஒரே முனைப்பு. சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசும், ஜம்மு - காஷ்மீர் மாநிலக் கட்சிகளும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றன என்றவுடன் பிரிவினைவாத சக்திகளும், பயங்கரவாதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். இதற்கு பாகிஸ்தானின் பின்னணி இல்லாமல் இருக்காது என்பதும் உலகறிந்த உண்மை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய - பாகிஸ்தான் எல்லையிலிருந்து 14 கி.மீ. தூரத்திலுள்ள ஜம்மு விமானப்படைத் தளத்தில் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. முதலில் வந்த ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்ட குண்டு, நிர்வாகக் கட்டடத்தின் அருகில் விழுந்து சேதம் ஏற்படுத்தியது. ஏழு நிமிடங்கள் கழித்து மீண்டும் மற்றொரு ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்ட குண்டால் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். ஒரு குண்டு கட்டுப்பாட்டு அறைக்கு அருகே விழுந்திருக்கிறது. இதன் மூலம் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டு அறையையும், ஹெலிகாப்டர்களையும் குறிவைத்துத்தான் ஆளில்லா விமான குண்டு வீச்சை நடத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் மீண்டும் பறந்து சென்றன. ஜம்மு புறநகரிலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் வேவு பார்ப்பதற்காகப் பறந்ததாகவும், அவை திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய விமானப்படையின் கண்காணிப்புக் கருவியின் (ரேடார்) பார்வையிலிருந்து தப்பி ஆளில்லா விமானங்கள் எப்படி நுழைந்தன என்பது வியப்பாக இருக்கிறது. அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானங்களில் ஏதாவது ஒன்று வீழ்த்தப்பட்டிருந்தால், அதன் உதிரி பாகங்களிலிருந்து எங்கிருந்து அவை அனுப்பப்பட்டன என்பதைக் கண்டுபிடித்திருக்கலாம். அதற்கு வழியில்லாமல் அந்த ஆளில்லா விமானங்கள் திரும்பிவிட்டன.
இதுபோல ஆளில்லா விமான ஊடுருவல் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடப்பது புதிதொன்றுமல்ல. இதற்கு முன்னால் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் ஜம்மு - காஷ்மீரிலும், பஞ்சாபிலும் ஆயுதங்கள் தரப்பட்டிருக்கின்றன. இப்போதைய ஆளில்லா விமானத் தாக்குதல் அவற்றிலிருந்து மாறுபட்டு, முக்கியமான ராணுவத் தளங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த முற்பட்டிருக்கின்றன. இது பயங்கரவாதிகளால் நடத்தப்படுகிறதா அல்லது பாகிஸ்தான் அரசின் பின்துணையுடன் நடத்தப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது.
ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடருமானால், அடுத்த கட்டமாக ராணுவத் தளங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் கூடும் இடங்களும் இலக்காக மாறக்கூடும். சுமார் 20 கிலோ எடையுள்ள சிறிய ஆளில்லா விமானங்கள் மிகவும் ஆபத்தான வெடிகுண்டுகளை இலக்கு நிர்ணயித்து தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுவது வித்தியாசமான போர்த்தந்திரம். அதைத் தடுத்து, அந்த ஆளில்லா விமானங்களைத் தாக்கி சேதப்படுத்தும் தொழில் நுட்பத்தை இப்போதைக்கு இஸ்ரேல் மட்டும்தான் வெற்றிகரமாகக் கையாள்கிறது.
2019 செப்டம்பர் மாதம் யேமனில் உள்ள ஹூதி போராளிகள் சவூதி அரேபியாவிலுள்ள எண்ணெய்க் கிணறுகளைத் தாக்கி சேதப்படுத்தினர். கடந்த மே மாதம் சவூதி எல்லைக்குள் ஆளில்லா விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சமடைந்திருந்த பயங்கரவாத குழுக்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருக்கின்றன.
ஆளில்லா போர் விமானத் தாக்குதல் என்பது உலகெங்கிலும் அதிகரித்து வருகிறது. சிரியாவுடனான ராணுவ மோதலில் துருக்கிப் படைகள் இந்த உத்தியைக் கடைப்பிடித்து பீரங்கிகள், தளவாடங்களை அழித்திருக்கிறது. ஆர்மீனியா - அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாலஸ்தீனமும், இஸ்ரேலும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையிலும் இப்போது ஆளில்லா விமானத் தாக்குதல் தொடங்கியிருக்கிறது.
ஜம்மு விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் ஆளில்லா விமான தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என்று புலன் விசாரணை அமைப்புகள் கருதுகின்றன. ஜூன் 27 நடந்த ஜம்மு வெடிகுண்டு தாக்குதல் சோதனை தாக்குதலாகக்கூட இருக்கக்கூடும். அடுத்த கட்டமாக ஒரே நேரத்தில் பல இடங்களில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் முற்படலாம். அதை எதிர்கொள்ளத் தேவையான கண்காணிப்பு கேமராக்களையும், தொழில் நுட்பத்தையும் மேம்படுத்துவதில்தான் நமது பாதுகாப்பு இருக்கிறது.
ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது, ஜனநாயகம் மலர்ந்துவிடக் கூடாது, வளர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் பயங்கரவாதிகளின் எண்ணம் நிறைவேறிவிடக் கூடாது!