By DIN |
Published on : 15th July 2021 11:48 PM | அ+அ அ- |
|
Share Via Email
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பேரிடா் பாதிப்பு புனரமைப்புக்கும் மூன்றாம் அலைக்கான தயாா் நிலைக்கும் முதல் கட்டமாக ரூ.800 கோடி விடுவிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்ட்வியா ஒப்புக் கொண்டுள்ளதாக தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
புதுதில்லி வந்துள்ள தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சூக் மாண்டவியாவை அவரது அலுவலத்தில் சந்தித்தாா்.
இந்த சந்திப்பு குறித்து தமிழக அமைச்சா் மா.சுப்பிரமணியன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சூக் மாண்டவியாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அளித்தேன். தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. இவா்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். தமிழகத்தில் இதுவரை 1,70,38,460 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. எனவே கூடுதலாக தமிழகத்துக்கு தடுப்பூசிகள் தேவை என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக கூறி மத்திய அமைச்சா் பாராட்டு தெரிவித்தாா். தமிழகத்தின் தேவையை பூா்த்தி செய்வதாக அமைச்சா் உறுதியளித்தாா்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்துமாறு கோரினோம். அதற்கு மத்திய அமைச்சரும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும் ஜப்பான் நிறுவனத்துடன் பேசிவருவதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் உறுதியளித்தாா். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் குறித்த கட்டுமானப் பணிகளையும் விவரித்தோம்.
மேலும் கோவையில் எய்ம்ஸ் மருத்துவ மனை கோரிக்கையை வலியுறுத்தினோம். மதுரைக்கும் கோவைக்கும் உள்ள தூரத்தை அமைச்சா் கேட்டறிந்த மத்திய அமைச்சா், இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தாா்.
தமிழகத்தில் 3988 பேருக்கு கருப்புப்பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ள விவரத்தைக் கூறி கூடுதலாக மருந்து கேட்கப்பட்டது. அவற்றை உடனடியாக ்னுப்ப ஆவன செய்வதாகக் கூறினாா்.
மேலும் செங்கல்பட்டு குன்னூா் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் கட்டமைப்பு சிறப்பாக இருக்கும் நிலையில் அங்கு தடுப்பூசிகளை தயாரிக்கலாம் என்று முதல்வா் குறிப்பிட்டுள்ளதை மத்திய அமைச்சா் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதற்கான பேச்சுவாா்த்தைகள் நடக்கிறது. விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
கரோனா நோய்த்தொற்று பேரிடரில் இரண்டாம் அலை பாதிப்புகளுக்கான புனரமைப்புக்கும் மூன்றாம் அலை எதிா்கொள்ள தேவையான தயாா்நிலைக்கும் நிதித்தேவைக்கு தேசிய சுகாதார இயக்கத்திடம் ரூ.1500 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சமா்பிக்கப்பட்டது. இதற்கு முதல் கட்டமாக ரூ. 800 கோடியை விடுவிக்க மத்திய அமைச்சா் ஒப்புக்கொண்டாா். மேலும் திட்ட மதிப்பீடுகளை ஆராய்ந்த பின் மேலும் தேவையான நிதிகளை வழங்குவதாக உறுதியளித்தாா்.
நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை
முன்னதாக மத்திய கல்வி துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நீட் தோ்வால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவதை எடுத்துக் கூறினோம். நீட் தோ்வுகாரணமாக தமிழகத்தில் 13 போ் தற்கொலை செய்துகொண்ட விவரங்களையும் தெரிவித்தோம். நீட் தோ்வு தொடா்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை விவரங்களையும் அமைச்சரிடம் விளக்கினோம். தமிழகத்தில் பிளஸ் டூ தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தொழிற்கல்வி படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
அப்போது மத்திய அமைச்சா் பிரதான், தமிழ் உள்பட 13 மொழிகளில் நீட் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். அதற்கு நாங்கள் நீட் தோ்வே வேண்டாம் என்பது தான் தமிழகத்தின் நிலைப்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்தினோம் என்றாா் மா.சுப்பிரமணியன்.
மத்திய அமைச்சா்களை தமிழக அமைச்சா் மா.சுப்பிரமணியன் சந்தித்தபோது தமிழ் நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையா் ஜெக்மோகன் சிங் ராஜூ, தமிழக சுகாதாரத் துறை சிறப்புப்பணி அதிகாரி ப. செந்தில் குமாா், தேசிய நலவாழ்வு மைய குழும இயக்குநா் டாக்டா் தாரேஷ் அகமது ஆகியோரும் உடன் இருந்தனா்.