By DIN |
Published on : 15th July 2021 04:03 AM | அ+அ அ- |
|
Share Via Email
காபூல்: ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை அந்த நாட்டு அரசுப் பிரதிநிதிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கத்தாரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) தொடங்கும் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஆப்கன் அரசுப் பிரதிநிதிகளுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கிறது.
ஆப்கன் நல்லிணக்க கவுன்சில் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் இந்தப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலிபான்களின் முக்கிய தலைவர்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு தோஹாவில் மட்டுமே அரசியல் அலுவலகம் உள்ளதால் அந்த நகரில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இதில், ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், அரசுத் தரப்பினருக்கும் தலிபான்களுக்கும் இடையே இந்தச் சந்திப்பு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், அமைதியை ஏற்படுவதற்கான முயற்சிகள் அண்மைக் கால வன்முறைச் சம்பவங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அங்கிருந்து வெளியேறி வரும் அமெரிக்கப் படைப் பிரிவு தளபதி ஸ்காட் மில்லர் தெரிவித்த நிலையில், உள்நாட்டு அளவிலான பேச்சுவார்த்தை தற்போது தொடங்குகிறது.
ஆப்கன் ராணுவத்திடம் பாதுகாப்புப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அமெரிக்கப் படையினர் வெளியேறி வரும் இந்தச் சூழலில், தலிபான்கள் நாட்டின் நிலப்பரப்புகளை வேகமாகக் கைப்பற்றி வருகின்றனர்.
தற்போது அவர்களது கட்டுப்பாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. எனினும், அந்த நாட்டின் 421 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ஏராளமான மாவட்டங்கள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதியாகும்.
தலிபான்களின் முன்னேற்றம் ஆப்கன் தேசிய ராணுவத்தின் பலவீனத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் தலிபான்களுடன் சண்டையிடாமலேயே அந்தப் பகுதிகளை ராணுவம் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தது. தலிபான்களுக்கு அஞ்சி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் வீரர்கள் தஜிகிஸ்தானுக்கு தப்பியோடினர்.
தலிபான்களுடன் சண்டையிட, ஆப்கன் ராணுவத்துக்குத் தேவையான வீரர்களும் ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருள்களும் அனுப்பப்படுவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அதிக ஆள் பலத்துடனும் ஆயுத பலத்துடனும் வரும் தலிபான்களிடமிருந்து ராணுவ வீரர்கள் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கன் மீது அமெரிக்காவும் நேட்டோ படைகளும் போர் தொடுத்தன. அந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-காய்தா தலைவர் பின்லேடனுக்கு புகலிடம் அளித்த தலிபான்களை ஆட்சியிலிருந்து அமெரிக்கா அகற்றியது.
அதன்பிறகு அமைக்கப்பட்ட ஆப்கன் அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு அமெரிக்க ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படை படிப்படியாக வெளியேறி வருகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் எஞ்சியிருக்கும் படையினரும் முழுமையாக திரும்பப் பெறப்படுவர் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதிகளுடனான தொடர்பை தலிபான்கள் முழுமையாகக் கைவிட வேண்டும்'
துஷாம்பே, ஜூலை 14: பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகளை தலிபான் அமைப்பினர் முழுமையாகக் கைவிட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தஜிகிஸ்தான் தலைநகர் துஷாம்பேவில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ புதன்கிழமை கூறியதாவது:
பயங்கரவாத அமைப்புகளுடனான தங்களது தொடர்புகளை தலிபான்கள் முற்றிலும் துண்டித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, அல்-காய்தா, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பிரிவினை கோரும் உய்கர் ஆயுதக் குழுக்களுடன் தலிபான்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினருக்கும் இடையே அரசியல் உடன்பாடு ஏற்பட்டால்தான் அந்த நாட்டில் முழுமையான உள்நாட்டுப் போர் மூள்வது தவிர்க்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக, சீனாவை தங்களது நட்பு நாடாகக் கருதுவதாகவும் உய்கர் இன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் ஆப்கன் தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.