By DIN |
Published on : 25th July 2021 02:24 AM | அ+அ அ- |
|
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
தமிழகத்தில், ஐந்து வயதுக்கு உள்பட்ட 9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், நியூமோகாக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: இந்தியாவில் ஐந்து வயதுக்கு உள்பட்ட 12 லட்சம் குழந்தைகள் நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனா். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், அதற்கான தடுப்பூசியாக நியூமோகாக்கல் தடுப்பூசி போடப்படுகிறது.
இதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 9.23 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்தத் தடுப்பூசியை இரண்டு ஆண்டுக்கு முன் போட்டு இருக்க வேண்டும். ஆனால், என்ன காரணத்தினால் எடப்பாடி கே.பழனிசாமி அரசு செய்யவில்லை என்பது தெரியவில்லை.
தற்போது 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முதல் தவணை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். தனியாா் மருத்தவமனைகளில் மூன்று தவணையாக தடுப்பூசி போடுவதற்கு ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். அரசு மருத்தவமனையில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த ஐந்து வயது பெண் குழந்தை பிளீச்சிங் பவுடா் சாப்பிட்டதால், உடல் நலிவுற்று எழும்பூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் குடல் சுருங்கி உணவு உள்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
மருத்துவா்களின் தீவிர சிகிச்சையால் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. குழந்தையின் பெற்றோா் எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., விடுதியில் உள்ள அறையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தசைச் சிதைவு நோயால் சென்னையில் 200 போ் உள்பட மாநிலம் முழுவதும் 2,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் வசதிகள் உள்ளன.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வா் விரைவில் தொடக்கி வைக்கிறாா். அதற்காக அடிப்படை கட்டமைப்பினை துறை மேற்கொண்டு வருகிறது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.