By DIN |
Published on : 27th July 2021 03:45 AM | அ+அ அ- |
|
உயா்நீதிமன்றம்
சென்னை: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் , இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை அளித்தது. ஆனால், உச்ச நீதீமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையின் 2021-2022 கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இதுகுறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.