comparemela.com

Card image cap


02 Aug 2021 7 PM
ஒரு வருட காலமாக முடங்கிக் கிடக்கும் `அம்மா குடிநீர்' ஆலை; புத்துயிர் கொடுப்பாரா ஸ்டாலின்?
அம்மா குடிநீர் ( Photo: Devarajan / Vikatan )
கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி மூடப்பட்ட கும்மிடிப்பூண்டி `அம்மா குடிநீர்' உற்பத்தி ஆலை ஒரு வருடத்துக்கு மேலாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர்த் திட்டம் முடங்கிப்போய் கிடக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களில் `அம்மா உணவகம்' மற்றும் `அம்மா குடிநீர்' திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆட்சிப் பொறுப்பு அ.தி.மு.க கையிலிருந்து தி.மு.க-வின் கைக்கு மாறிவிட்ட போதிலும், அம்மா உணவகம் திட்டம் எந்த வித தொய்வும் இன்றி வழக்கம்போல் எளியோர் பசி தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட `அம்மா குடிநீர்' திட்டம் அவரது மறைவுக்குப் பிறகான அ.தி.மு.க ஆட்சியிலேயே மெல்ல மெல்ல முடங்கத் தொடங்கி தற்போது முற்றிலுமாக மூடுவிழா காணும் நிலையில் இருக்கிறது.
பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 2013-ல் தமிழகம் முழுவதும் `அம்மா குடிநீர்’ உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதே ஆண்டிலேயே பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் `அம்மா குடிநீர்' திட்டம் நடைமுறைக்கு வந்தது. முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், சுமார் 10.5 கோடி மதிப்பீட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
அம்மா குடிநீர்’
நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கும்மிடிப்பூண்டி உற்பத்தி ஆலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள பேருந்து நிலையங்களிலும், நெடுந்தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும் ஒரு லிட்டர் பாட்டில் ரூபாய் 10 என விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை 20 ரூபாய்க்கும், ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ரயில்வே நிலையங்களில் ஒரு லிட்டர் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் `அம்மா குடிநீர்' திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதன் காரணமாக, அம்மா குடிநீர்த் திட்டம் தமிழகம் முழுவதும் 377 இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. தலைநகர் சென்னையில் மட்டும் 53 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
உங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா!
Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.Sign-up to our newsletter
கும்மிடிப்பூண்டி ஆலை தொடங்கப்பட்ட நேரத்தில் அந்த ஆலையின் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 2 லட்சம் முதல் 2.5 லட்சம் லிட்டர் வரை இருந்தது. திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த உற்பத்தி ஆலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகான அ.தி.மு.க அரசு `அம்மா குடிநீர்' திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்காததால் உற்பத்தி செய்யப்படும் குடிநீரின் அளவு குறைந்துகொண்டே வந்தது. கும்மிடிப்பூண்டி குடிநீர் உற்பத்தி ஆலையை மட்டுமே நம்பி விரிவுபடுத்தப்பட்ட அம்மா குடிநீர் திட்டமானது, உற்பத்தி குறைந்ததன் காரணத்தால் மெல்ல மெல்ல முடங்கத் தொடங்கியது. நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் குடிநீர் வரை உற்பத்தி செய்யப்பட்ட ஆலையில் 30,000 லிட்டர்கூட உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் தேவைக்கேற்ப குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய முடியாமல் போனது.
கும்மிடிப்பூண்டி அம்மா குடிநீர் உற்பத்தி ஆலை
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால், பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அம்மா குடிநீர் உற்பத்தி ஆலையும் மூடப்பட்டு தமிழகம் முழுவதிலும் அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. அதற்குப் பிறகு, கொரோனா பரவல் தணிந்து தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும்கூட தற்போது வரையிலும் குடிநீர் உற்பத்தி ஆலை திறக்கப்படாமலே இருந்து வருகிறது. கொரோனாவைக் காரணம் காட்டி மூடப்பட்ட உற்பத்தி ஆலையானது, ஒருவருடத்துக்கு மேலாகியும் மீண்டும் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் இருப்பதால் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் விற்பனை மையங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
இந்த ஆண்டு கோடைக்காலத்துக்கு முன்னதாகவே கும்மிடிப்பூண்டி ஆலையை மீண்டும் திறந்து, உற்பத்தியை அதிகரித்து குடிநீர் விநியோக சங்கிலியைப் போக்குவரத்துக் கழகம் சீராக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து முன்வைத்து வந்தனர். ஆனால், கொரோனா பரவல் மற்றும் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் ஆலை திறப்பு சாத்தியப்படாமல்போனது. இந்நிலையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தி.மு.க அரசு அம்மா குடிநீர் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்ததால், கடந்த மாதம் 13-ம் தேதி தமிழக போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கும்மிடிப்பூண்டி அம்மா குடிநீர் உற்பத்தி ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். பல மாத காலமாகத் திறக்கப்படாமல் இருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்ட அமைச்சர், செய்தியாளர் சந்திப்பில், ``அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்டு விட்டு முடிவெடுக்கப்படும்" என்றார்.
ராஜகண்ணப்பன்
வருடக்கணக்கில் திறக்கப்படாமல் இருக்கும் குடிநீர் உற்பத்தி நிலையத்தில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் இயந்திரங்கள் துருப்பிடித்துக் கிடப்பதாகவும், மர்ம நபர்கள் சிலர் இயந்திர பாகங்களைத் திருடிச் சென்றுகொண்டிருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதனால், குடிநீர் உற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து அறிந்துகொள்ள ஆலை அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்துக்குச் சென்றிருந்தோம். மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்ட அந்த ஆலையின் அருகே ஒரே ஒரு ஊழியர் மட்டும் இருந்தார்.
அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ``போன வருஷம் கொரோனா லாக்டௌன்'ல மூடினது. இன்னும் அப்படியேதான் இருக்குது. உள்ள இருக்குற இயந்திரங்கள் எதுவுமே பராமரிக்கப்படுறதில்ல. அப்படியேதான் கிடக்கு. சில மெசின்கள்'ல மோசமா துரு பிடிச்சிருக்கு. அமைச்சர் வந்ததுக்காகக் கொஞ்சம் வெளியில மட்டும் சுத்தம் செய்யச் சொன்னாங்க. இதே இடத்துல இன்னொரு குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப் போறதா போன ஆட்சியில சொன்னாங்க. ஆனா, அதுக்கான வேலைகளும் இங்க எதுவும் தொடங்கப்படல. இங்க சுத்தி சிசிடிவி கேமரா இருக்கு. அதனால, உள்ள எந்தப் பொருளும் இது வரைக்கும் திருடு போகல. அமைச்சர் முதல்வர்கிட்ட ஆலோசனை செஞ்சுட்டு சொல்லுறதா சொல்லிட்டுப் போயிருக்காரு" என்றார்.
குடிநீர் ஆலை திறக்கப்படுமா, இல்லை முழுமையாக மூடப்பட்டு, `அம்மா குடிநீர்' திட்டம் கைவிடப்படுமா என்று ஒருபுறம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்னொருபுறம், நடப்பது தி.மு.க ஆட்சி என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தை `கலைஞர் குடிநீர்' திட்டம் என்று பெயர் மாற்றி கும்மிடிப்பூண்டி ஆலையை மீண்டும் இயக்க ஆலோசனை நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
அம்மா குடிநீர் ஆலை
Also Read
இதை உறுதிப்படுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் விளக்கம் கேட்க அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.
`அம்மா குடிநீர்' திட்டமோ `கலைஞர் குடிநீர்' திட்டமோ... ஏதோ ஒரு பெயரில் இந்த மகத்தான திட்டம் தொடர்ந்திட வேண்டும் என்பதே தமிழக மக்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது..!

Related Keywords

India , Tamil Nadu , Tiruvallur , , Tiruvallur District , Gummidipundi Road Transport , Amma Kudineer , இந்தியா , தமிழ் நாடு , திருவள்ளூர் , திருவள்ளூர் மாவட்டம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.