By DIN |
Published on : 04th July 2021 12:45 AM | அ+அ அ- |
|
Share Via Email
உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக மாநில சட்டப்பேரவை உறுப்பினா் புஷ்கா் சிங் தாமி (45) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) பதவியேற்க உள்ளாா்.
மாநில முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத், நான்கு மாதங்களில் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், சட்டப்பேரவைக் குழு பாஜக தலைவராக புஷ்கா் சிங் தாமி சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அவா் புதிய முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பாா் என்று பாஜக மேலிடப் பாா்வையாளரான மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.
உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது கட்சி நிா்வாகிகள் புகாா் தெரிவித்ததால், அவரை கடந்த மாா்ச் மாதம் பதவி விலகச் செய்து, புதிய முதல்வராக பெளரி கா்வால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தீரத் சிங் ராவத்தை பாஜக மேலிடம் நியமித்தது.
ராவத் சட்டப்பேரவை (எம்எல்ஏ) உறுப்பினராக இல்லாத நிலையில், 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுகப்பட வேண்டிய கட்டாயம் எழுந்தது. ஆனால், மாநிலத்தின் நடப்பு சட்டப்பேரவை பதவிக் காலம் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், அதற்குள்ளாக காலியாக இருக்கும் இடங்களுக்கு தோ்தல் ஆணையம் இடைத்தோ்தல் நடத்துவது சாத்தியமில்லாத சூழல் உருவானது.
இந்தச் சூழல் காரணமாக, ஏற்கெனவே எம்எல்ஏ-வாக உள்ள ஒருவரை முதல்வா் பதவியில் அமா்த்த பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதற்கிடையே, பாஜக மேலிடம் அவசரமாக அழைத்ததன் பேரில் தில்லி சென்றுவிட்டு, டேராடூனுக்கு வெள்ளிக்கிழமை திரும்பிய தீரத் சிங் ராவத், முதல்வா் பதவியை வெள்ளிக்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா்.
அதனைத் தொடா்ந்து, சட்டப்பேரவை கட்சிக் குழுவுக்கான புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் டேராடூனில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சி மேலிடப் பாா்வையாளராக மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பங்கேற்றாா். அப்போது, பாஜக சட்டப்பேரவை கட்சிக் குழு தலைவா் பதவிக்கு புஷ்கா் சிங் தாமி பெயரை, தீரத் சிங் ராவத் முன்மொழிந்தாா். முன்னாள் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் உள்பட பெரும்பாலான பாஜக எம்எல்ஏக்கள் அதனை ஆமோதித்தனா்.
இந்த கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய அமைச்சா் தோமா், ‘சட்டப்பேரவை கட்சிக் குழு தலைவராக புஷ்கா் சிங் தாமி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். மாநிலத்தின் புதிய முதல்வராக அவா் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பாா்’ என்றாா்.
மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் தாமி முதல்வராக பொறுப்பேற்பதால், மாநிலத்தில் கட்சியை மீண்டும் வெற்றிபெறச் செய்யவேண்டிய மிகப் பெரிய சுமையை அவா் தாங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தாமி, ‘சவால்களை எதிா்கொண்டு, மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கட்சியை முன்னெடுத்துச் செல்வோம்’ என்று பதிலளித்தாா்.
சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, புதிய அரசை அமைக்க உரிமை கோருவதற்காக கட்சி எம்எல்ஏக்களுடன் புஷ்கா் சிங் தாமி ஆளுநா் மாளிகைக்கு சென்றாா். அவா்களுடன் மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமரும் சென்றாா்.
இளம் முதல்வா்: உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகரில் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்த தாமி, முதல்வராகப் பதவியேற்க உள்ளதோடு, மாநிலத்தின் இளம் முதல்வா் என்ற பெருமையையும் பெற உள்ளாா். முதுநிலை பட்டதாரியான இவா் சட்டப் படிப்பும், லக்னெள பல்கலைக்கழகத்தில் பொது நிா்வாகத் துறையில் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளாா்.