comparemela.com

Card image cap


26 Jul 2021 10 AM
லட்சத்தைக் கடந்த சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை! - தக்கவைத்துக்கொள்வது எப்படி?
சென்னை மாநகராட்சிப் பள்ளி ( வி.ஶ்ரீனிவாசுலு )
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்த எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்யப்போகிறது?
கடந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க, பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம்காட்டிவருகிறார்கள். சென்னை மாநகராட்சியில் மட்டும் 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளில் 90,000-க்கும் அதிகமான மாணவர்களும், கிட்டத்தட்ட 3,000 ஆசிரியர்களும் பணியாற்றிவருகின்றனர்.
பள்ளி மாணவர்கள்
மாதிரிப் படம்
சென்னை மாநகராட்சியிலுள்ள பள்ளி வகுப்பறைகளை ஸ்மார்ட் கிளாஸாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும், பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகள், குடிநீர் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலவழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பல்வேறு கட்டமைப்புகளை அதிகரித்தபோதிலும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்தே காணப்பட்டது.
உங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா!
Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.Sign-up to our newsletter
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் அளவுக்குக் கட்டமைப்பு இருந்தபோதிலும், 80-90 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படித்துவந்தனர். இந்தநிலையில், இந்தக் கல்வியாண்டில் தங்களின் பிள்ளைகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்க, பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம்காட்டிவருகிறார்கள். மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 14-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய ஒரே வாரத்திலேயே 7,000-க்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு, கொரோனா பாதிப்பு பலதரப்பு மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியது ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி வழங்குவது இன்னொரு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை : 2019-2020 கல்வியாண்டில் 83,098; 2020-2021 கல்வியாண்டில் 90,394; 2021-2022 கல்வியாண்டில் 1,02,605.
சென்னை மாநகராட்சி ஆணையர் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிட்டுவருகிறார். அதோடு, இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பணியிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். மேலும், அவர்கள் வீடு வீடாகச் சென்று மாநகராட்சிப் பள்ளியின் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். இந்த அனைத்தும்தான் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததற்குக் காரணமாக அமைந்தது. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தக் கல்வி ஆண்டில்தான் மாணவர்களின் சேர்க்கை ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பது தொடர்பாக, சென்னை மாநகராட்சித் துணை ஆணையர் (கல்வி) டி.சினேகாவிடம் பேசினேன். ``சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2011-ம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை 1,00,320-ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 88,000 முதல் 95,000 வரை என்ற நிலையில்தான் இருந்துவந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. 2021-22-ம் கல்வியாண்டில் மட்டும் 27,311 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இதில் 19,000-க்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள்தான்'' என்றார்.
சென்னை மாநகராட்சி
தொடர்ந்து பேசியவர், ``நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 1,02,605-ஆக இருக்கிறது (22.07.2021-நிலவரப்படி). மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. மாணவர்களின் சேர்க்கை அந்தந்தப் பள்ளிதோறும் நடைபெற்றுவருகிறது. ஒருசில பள்ளிகளில் அளவு எண்ணிக்கையைத் தாண்டி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றிருக்கிறது. அந்தப் பள்ளிகளில் வகுப்பறைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். வரும் காலங்களில் மாநகராட்சிப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Also Read
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. இந்த மாணவர்களை அரசுப் பள்ளிகளில் தக்கவைத்துக்கொள்ள அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினேன். ``ஒரு மாணவருக்குச் சிறந்த கல்வியை அரசைத் தவிர வேறு யாரால் கொடுத்துவிட முடியும்... அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் இருப்பதை அரசு செய்ய வேண்டும். இந்த வசதிகளைச் செய்வதற்கு அரசிடம் பணம் இல்லையா என்ன? அதுமட்டுமல்லாமல், முக்கியமாக ஒவ்வொரு வகுப்புக்கும், பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் இருப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும். தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வியை அரசால் கொடுக்க முடியும் என்று நம்பி பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துவருகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்குச் சரியான கல்வியைத் தருவதுதாதான் இந்த அரசின் கடமை" என்றார்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு
கொரோனா ஏற்படுத்திய நிலை காரணமோ, அவர்கள் சூழல் காரணமோ, அரசின் நடவடிக்கைகள் காரணமோ... எந்தக் காரணமாக இருந்தாலும், பெற்றோர்கள் அரசை நம்பித்தான் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவருகிறார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு நியாயமான கல்வியைக் கொடுத்து, அரசுப் பள்ளிகளிலேயே தக்கவைத்துக்கொள்ள வேண்டியது மட்டுமல்லாமல், வரும் கல்வியாண்டில் இன்னும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அரசின் பொறுப்பு. அதை இந்த அரசு சரியாகச் செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Related Keywords

Chennai , Tamil Nadu , India , , Chennai Corporation , Chennai Corporation School , Education Provided , சென்னை , தமிழ் நாடு , இந்தியா , சென்னை நிறுவனம் , சென்னை நிறுவனம் பள்ளி ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.