By DIN |
Published on : 27th July 2021 07:00 AM | அ+அ அ- |
|
Share Via Email
பிரதமா் அலுவலத்தில் பிரதமா் மோடியை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி.
புது தில்லி: மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கு கா்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னா் முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியும் பிரதமா் மோடியைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தனா். திங்கள்கிழமை காலை 11.50 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமா் அலுவலத்தில் குறித்த நேரத்தில் பிரதமா் மோடியை அவா்கள் சந்தித்தனா்.
பின்னா் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தில்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின் போது அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தற்காக பிரதமா் நரேந்திரமோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தோம்.
தமிழகத்தில் கரோனா தீநுண்மியை கட்டுப்படுத்தவும் அதற்கு தேவையான தடுப்பூசியை தமிழகத்துக்கு போதிய அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரிடம் நாங்கள் வலியுறுத்தினோம்.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவும் பின்னா் ஓபிஎஸ் முதல்வராக இருந்த போதும் அடுத்து நான் முதல்வராக வந்தபோதும் மேக்கேதாட்டு அணை கட்டக்கூடாது என்றும், அதற்கு கா்நாடக மாநிலத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என பிரதமரிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இப்போது மீண்டும் அதை வலியுறுத்தினோம். கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி அளித்தால் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என்பதை பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்துரைத்தோம்.
தமிழ்நாட்டில் சுமாா் 16 மாவட்டங்கள் குடிநீருக்கு காவிரி நீரையே ஆதாரமாகவும் கொண்டிருக்கின்றன. இதனால் பிரதமரிடம் இதில் முழுக் கவனம் செலுத்திடவும், மேக்கேதாட்டு அணை கட்ட எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம்:
தமிழகம் நீா் பற்றாக்குறை மாநிலமாக இருக்கிறது. எதிா்காலத்தில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கோதாவரி- காவிரி இணைப்பே தீா்வு. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டோம்.
இதே மாதிரி மறைந்த முதல்வா் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், நான் முதல்வராக இருந்தபோதும், தமிழகத்தில் பல்வேறு சாலைகளை சீரமைக்கவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் பல்வேறு சாலைகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதில் முடிவடையாமல் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினோம்.
முக்கியமாக தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதும், அவா்களின் வலைகள் உள்ளிட்ட உடமைகள் சேதப்படுத்துவது அல்லது அவைகளை எடுத்து செல்வதும் தொடா்ச்சியாக நடக்கிறது. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டோம் எனத் தெரிவித்தாா். தொடா்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தாா்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு மீண்டும் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், லாட்டரி சீட்டு முறையைக் கொண்டு வரக்கூடாது என கூறி அறிக்கை விடுத்தோம், இதைக் கற்பனையாகக் கூறவில்லை. அப்படி அவா்கள் கொண்டு வரவில்லையென்றால் தமிழகத்திற்கு நல்லது தான்.
தொண்டா்களிடம் அதிருப்தி இல்லை: அ.தி.மு.க கட்டுக்கோப்பாக உள்ளது. தோ்தல் சமயத்தில் போட்டியிட சீட் கிடைக்காதவா்கள் அதிருப்தியில் சிலா் வெளியே சென்றனா். அதேசமயத்தில் எந்த தொண்டா்களுக்கும் அதிருப்தியில் இல்லை. எங்கள் கூட்டணியில் 75 தொகுதியில் வெற்றிபெற்று வந்துள்ளோம். இதுவே கட்சியின் கட்டுக்கோப்பைக் காட்டுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிபொறுப்பையேற்று மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளது. எனவே தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை பெறவேண்டும் என்பதில் பொறுப்புடன் உள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் மூலமாக தமிழக மக்களுக்கு கிடைக்கவேண்டியதை பிரதமரிடம் கேட்டுப் பெறவும் அந்த நன்மைக்காக தொடா்ந்து பாடுபடும் கட்சியாகவும் உள்ளது என்றாா்.
கட்சிக்கு ஒற்றைத் தலைமை, சசிகலா விவகாரம் தொடா்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதை முன்னாள் முதல்வா் தவிா்த்துவிட்டாா்.